< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்

தினத்தந்தி
|
4 Aug 2023 9:44 AM GMT

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ருத்ரபிரயாக்,

உத்தரகாண்டில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். கவுரிகுண்ட் பகுதிக்கு அருகில் பல கடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே விழும் பாறைகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக வட்ட அதிகாரி விமல் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் நேபாளத்தைச் சேர்ந்த சிலர் உட்பட காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். காணாமல் போனவர்களில் சிலர் வினோத் (வயது 26), முலாயம் (வயது 25), அஷு (வயது 23), பிரியன்ஷு சாமோலா (வயது 18), ரன்பீர் சிங் (வயது 28), அமர் போஹ்ரா, அவரது மனைவி அனிதா போஹ்ரா, அவர்களது மகள்கள், ராதிகா போஹ்ரா, பிங்கி போஹ்ரா, அவர்களது மகன்கள் பிரித்வி போஹ்ரா (வயது 7), ஜடில் (வயது 6) மற்றும் வகில் (வயது 3) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பவுரி, டெஹ்ரி, ருத்ரபிரயாக் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சமோலி, நைனிடால், சம்பாவத், அல்மோரா மற்றும் பாகேஷ்வர் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்