சித்ரதுர்காவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு - 38 பேர் படுகாயம்
|சித்ரதுர்காவில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில், 38 பேர் படுகாயம் அடைந்தனர்.
சித்ரதுர்கா,
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று சிவமொக்காவை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அனுமன் தேவகுந்தி அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் இடிபாடுகளிடையே சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்த 38 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயம் அடைந்த 38 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலல்கெரே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 3 பேர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவரது உடல் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு உள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் சிவமொக்கா மாவட்டம் சாகரை சேர்ந்த கணபதி (வயது 40), உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவரை சேர்ந்த ஜெகதீஷ் என்பது தெரியவந்தது. மற்றொருவரின் பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து ஒலல்கெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.