'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன' - ஜெய்ராம் ரமேஷ்
|இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை புதிய சான்றுகள் காட்டுகின்றன. முதலாவதாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 2022-23ல் தனியார் துறை முதலீட்டில் ஒரு சிறிய எழுச்சிக்குப் பிறகு, முதலீடு ஒரு நிலையற்ற பாதைக்கு திரும்பியுள்ளது. 2023-24 நிதியாண்டில் தனியார் துறையின் புதிய திட்ட அறிவிப்புகள் 21% ஆக குறைந்தன. இது இந்தியாவின் நுகர்வோர் சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை, அரசாங்கத்தின் சீரற்ற கொள்கை உருவாக்கம் மற்றும் ரெய்டுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற முதலீட்டு சூழலை பிரதிபலிக்கிறது.
இரண்டாவதாக, ''மேக் இன் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் உற்பத்தித்துறை தேக்கமடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை, உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே உள்ளது. உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு பெருமளவில் தேக்கமடைந்துள்ளது.
2005-15 வரையிலான காலகட்டத்தில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் வேகமாக வளர்ந்தது. ஆடை உற்பத்தி போன்ற துறைகளில், ஏற்றுமதி 2013-14ல் 15 பில்லியன் டாலரிலிருந்து 2023-2024ல் 14.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மூன்றாவதாக, 2022-2023க்கான சமீபத்திய ஆண்டுத் தொழில் ஆய்வு (ASI) இந்தியாவின் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மற்றும் உற்பத்தித்திறன் சரிவை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொழிலாளிக்கான GVA வளர்ச்சி (தொழிலாளர் உற்பத்தித்திறன் அளவீடு) 2014-15ல் 6.6% ஆக இருந்த நிலையில், 2018-19ல் 0.6% ஆக குறைந்தது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 2023-ம் நிதியாண்டில் தொழிலாளர் உற்பத்தித்திறன் மீண்டும் சரிந்தது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், இது ஊதிய வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது. இதனால் நுகர்வு பலவீனமாக இருக்கும். இதன் விளைவாக ஏற்படும் குறைந்த முதலீடு, இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான தடையாக இருக்கும். இந்த விவரங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் இவை இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.