விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த 3 பேர் கைது..!
|தனியார் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
தனியார் விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக டெல்லியின் மாளவியா நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் இருந்த அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டதாகவும் இதுவரை நான்கு தவணைகளில் ரூ. 20,784 பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பெயரில் வாழ்த்து கடிதங்கள் மற்றும் போலி நியமன கடிதங்களை அவர்கள் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் பவன் குமார் கூறுகையில், விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் அழைப்புகளைப் பயன்படுத்தியதும், போலி முகவரியில் சிம் கார்டு மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களைப் பற்றிய அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் பெறப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் ராஜஸ்தானின் பில்வாராவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக, ஒரு குழு பில்வாராவிற்கு சென்று மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜக்மோகன் ஷர்மா (34), அபிஷேக் வர்மா (32) மற்றும் புர்கா ராம் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. அவர்களுடைய வங்கிக் கணக்கின் விவரங்களைச் சரிபார்த்ததில், அதில் மொத்தம் ரூ.10.9 லட்சம் பரிவர்த்தனை கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.