சுதந்திர தின ஊர்வலத்தின் போது இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய 3 பேர் கைது!
|உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நாட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நாட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மூவண்ணக்கொடி ஏந்திய பேரணியில் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் 76வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று, ஆக்ராவில் கோகுல்புரா பகுதியில் மதியம் 1 மணியளவில், 'மூவண்ணக்கொடி யாத்திரை' நடைபெற்றுக் கொண்டிருந்த போது 3 இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோவையும் ஆதாரமாக ஒருவர் சமர்ப்பித்துள்ளார். மேலும், தேச விரோத கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் அளித்த புகாரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் ஆகஸ்ட் 16 அன்று கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பைசான், சதாப் மற்றும் முஹாஸம் ஆகிய 19 முதல் 21 வயது வரை உள்ள அந்த இளைஞர்கள் மூவரும் ஆக்ரா நகரில் உள்ள கோகுல்புரா பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.