பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
|பா.ஜ.க.வுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் நேரில் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ரவீந்திர குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருடன் இன்று சந்திரபாபு நாயுடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இருகட்சிகளிடையே விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.