< Back
தேசிய செய்திகள்
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு நடந்த 2-வது திருமணம்; புதுப்புது தகவல்கள்
தேசிய செய்திகள்

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு நடந்த 2-வது திருமணம்; புதுப்புது தகவல்கள்

தினத்தந்தி
|
17 Jan 2023 7:01 PM IST

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் வசிக்கிறார் என்றும் அவருக்கு 2-வது திருமணம் நடந்து உள்ளது என்றும் தகவல் வெளிவந்து உள்ளது.



புனே,


மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.

குண்டுவெடிப்புக்கு பின்னர் நாட்டை விட்டு தப்பியோடிய அவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

அவரது சகோதரி ஹசீனா பார்க்கர். இந்தியாவிலேயே வசித்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரது மகன் அலிஷா இப்ராகிம் பார்க்கர். இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

அதில் பல தகவல்கள் வெளிவந்து உள்ளன. இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காஜி பாபா தர்கா அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

இப்ராகிம் தனது முதல் மனைவி மெஹ்ஜாபீனை விவாகரத்து செய்யாமலேயே, 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால், மெஹ்ஜாபீன் மும்பையில் உள்ள தனது உறவினர்களிடம் தொடர்பிலேயே இருந்து வருகிறார். அவரை துபாயில் வைத்து கடந்த ஆண்டு சந்தித்தேன் என அலிஷா கூறியுள்ளார்.

2-வது மனைவி, பதான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த பதான் பிரிவினர் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள். ஈரானிய பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர்.

டி கம்பெனி என்ற பெயரிலான சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஒன்றை நடத்தி வருவதற்காக தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளி சோட்டா சகீல் மற்றும் 3 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும் செய்திகள்