இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர்; நவீன் பட்நாயக் புதிய சாதனை
|இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை நவீன் பட்நாயக் படைத்துள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5 முறை பதவி வகித்த பெருமை கொண்டவர் நவீன் பட்நாயக். கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி முதன்முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்ற அவர், நேற்றுடன் மொத்தம் 23 ஆண்டுகள் மற்றும் 139 நாட்களை பூர்த்தி செய்து உள்ளார்.
இதனால், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி ஜோதி பாசுவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். அரசியல் வாழ்வில் ஒரு மைல்கல்லை எட்டி பட்நாயக் புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 1977-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி முதல் 2000-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி வரை மொத்தம் 23 ஆண்டுகள் மற்றும் 137 நாட்கள் வரை ஜோதி பாசு அந்த பதவியை வகித்திருக்கிறார்.
எனினும், இந்த வரிசையில் சிக்கிம் முன்னாள் முதல்-மந்திரியான பவன் குமார் சாம்லிங் முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் சிக்கிம் மாநிலத்தில் 1994-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி முதல் 2019-ம் ஆண்டு மே 26-ந்தேதி வரை 25 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார்.