2ஜி வழக்கில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
|2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதிட்டுள்ளது.
புதுடெல்லி,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
5 முறைகேடுகள்
இந்த மனுக்களை நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். இதன்படி நேற்று விசாரணை தொடங்கியதும் நீதிபதி, சி.பி.ஐ. தரப்பு வக்கீல் நீரஜ் ஜெயினை நோக்கி, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த வழக்கு என்ன, சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பில் எங்கே தவறு உள்ளது? என்று விளக்குமாறு கேட்டார்.
உடனே வக்கீல் நீரஜ் ஜெயின், '2ஜி வழக்கில் அளிக்கப்பட்ட 1,552 பக்க தீர்ப்பை விளக்குவதற்கு பதிலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இருந்த கூட்டு, கட்-ஆப் தேதியை நிர்ணயித்தது, முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற கொள்கையை மீறியது, நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்காதது, விசாரணையின்போது கண்டறியப்பட்ட 200 கோடி ரூபாய் ஆகிய 5 முறைகேடுகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது போன்றவற்றை மட்டுமே வாதங்களாக முன் வைக்க விரும்புகிறோம்' என தெரிவித்தார்.
தீர்ப்பு பிழையானது
இந்த கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என நீதிபதி தெரிவித்தபோது, வக்கீல் நீரஜ் ஜெயின், '2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் விசாரணை அதிகாரி, சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோர் அளித்த சாட்சியங்களை நிராகரித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஆசிர்வாதம் ஆச்சாரிக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாக தெரிவித்து அவரது சாட்சியம் நிராகரிக்கப்பட்டது. ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பிழையானது. அவற்றில் வெளிப்படையாகவுள்ள சட்ட முரண்களை முன் வைக்க விரும்புகிறோம்' என வாதிட்டார்.
மேல்முறையீட்டு அனுமதி
ஆர்.கே. சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, 'அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் நோக்கிலே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நுழைவு கட்டண கொள்கை அமைந்திருந்தது. இது தொடர்பாக அப்போதைய நிதித்துறை செயலருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் ஆ.ராசா கைதுக்கு முன் ஒரு மாதிரியாகவும், கைதுக்கு பின் வேறு மாதிரியாகவும் இருந்தன. சி.பி.ஐ., அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய பொதுவான அனுமதியை வழங்கக்கூடாது. இந்த விவகாரத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போலும், குற்றம்சாட்டப்பட்ட 16 நபர்களுக்கும் தனித்தனியாக மேல்முறையீட்டு அனுமதியை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளிப்பதற்கான சட்ட எல்லைகளை வரையறுக்க வேண்டியுள்ளது. அது குறித்து சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதற்கு வக்கீல் நீரஜ் ஜெயின் உரிய தீர்ப்புகளையும், காரணங்களையும் சுட்டிக்காட்டினார்.
29-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டின் மொத்த தீர்ப்பையும் வாசித்து புரிந்துகொண்டு, மேல்முறையீட்டு அனுமதி கோருவதற்கான முகாந்திரங்களை அறிக்கையாக சி.பி.ஐ. அளிக்க வேண்டும்.
அவற்றின் அடிப்படையில் மட்டுமே எதிர்மனுதாரர்களிடம் வினா எழுப்ப முடியும் என தெரிவித்து வருகிற 29-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.