2ஜி முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு
|2ஜி முறைகேடு வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.
இதற்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் மே மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.