< Back
தேசிய செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கியது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கியது

தினத்தந்தி
|
29 Aug 2023 12:23 AM IST

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின், 'வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி 2ஜி வழக்குக்கு தேவையான பல்வேறு ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யவில்லை அது கோர்ட்டை தவறாக வழிநடத்தியது என்றும், இவ்வாறு ஆவணங்களை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். எனவே இந்த கருத்துகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் ஆட்சேபம் இல்லை என தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, '2ஜி தீர்ப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் குறித்து சிறப்பு கோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்கி உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்றும், சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 31-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்