அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 28 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
|சரத் பவார் மற்றும் அஜித் பவார் தரப்பினர் இருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.
ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதனிடையே அஜித் பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சரத் பவார் தரப்பில் இருந்து சபாநாயகர் ராகுல் நர்வேகாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மராட்டிய சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.
அதே போல் அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் நடைபெற்ற இந்த இரு ஆலோசனைக் கூட்டங்களில் அஜித் பவார் தரப்பில் 28 எம்.எல்.ஏக்களும், சரத் பவார் தரப்பில் 17 எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகியுள்ளனர். இந்த இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் பலப்பரீட்சை மராட்டிய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.