காஷ்மீரில் 5 ஆண்டுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் 28 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை; அரசு தகவல்
|காஷ்மீரில் 2017ம் ஆண்டு முதல் இதுவரை பயங்கரவாதிகளால் புலம்பெயர் தொழிலாளர்கள் 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெற்றன.
இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் மற்றும் அமளியால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டு உள்ளது.
எரிபொருள், விலைவாசி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என அவையில் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களால் அவை ஒத்தி வைக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பேசும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு வழங்கிய தகவலின்படி, 2017ம் ஆண்டு முதல் இதுவரை, புலம்பெயர் தொழிலாளர்கள் 28 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
அவர்களில் மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 பேர், ஜார்க்கண்டை சேர்ந்த ஒருவர், பீகாரை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். மத்திய பிரதேசத்தில் இருந்து யாரும் பயங்கரவாதிகளால் கொல்லப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.