ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
|மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் சில குதிரை பந்தய கிளப்புகள் தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்துகின்றன. இதை 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 2-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
அதாவது ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தய கிளப்புளில் கட்டப்படும் பந்தய தொகையின் மொத்த முகமதிப்பு மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய ஜி.எஸ்.டி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் பின்னர் கூறினார். அதேநேரம் மாநில ஜி.எஸ்.டி. சட்டங்களில் இது தொடர்பான திருத்தங்களை அந்தந்த சட்டசபைகளில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக, பதிவு மற்றும் வரி செலுத்தும் விதிகளுக்கு இணங்கத் தவறினால், வெளிநாடுகளில் உள்ள ஆன்லைன் விளையாட்டு தளங்களுக்கான அனுமதியை தடுப்பதற்கும் இந்த திருத்தங்கள் உதவும். இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்படி ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.