விராஜ்பேட்டை அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து 27 காட்டுயானைகள் அட்டகாசம்
|விராஜ்பேட்டை அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்த 27-க்கும் அதிகமான காட்டுயானைகள் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதால் தொழிலாளிகள் பீதியடைந்தனர்.
குடகு-
விராஜ்பேட்டை அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்த 27-க்கும் அதிகமான காட்டுயானைகள் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதால் தொழிலாளிகள் பீதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் காட்டுயானைகளை ஒன்றிணைத்து வனப்பகுதிக்குள் துரத்தினர்.
காட்டுயானைகள் அட்டகாசம்
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது ஷில்பி காபி தோட்டம். இந்த காபி தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி காபி தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிைலயில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காபி தோட்ட தொழிலாளிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 27-க்கும் அதிகமான காட்டுயானைகள் ஷில்பியில் உள்ள காபி தோட்டங்களுக்குள் நுழைந்தன. பின்னர் அந்த காட்டுயானைகள் அங்கிருந்த காபி பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. இதனை பார்த்த காபி தோட்ட தொழிலாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் ஒரு நாள் முழுவதும் தொழிலாளிகள் வேலை செய்ய முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
வனப்பகுதிக்குள் துரத்தினர்
இந்தநிலையில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பீதியடைந்த தொழிலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து அட்டகாசம் செய்த யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த முடிவு செய்தனர். அதன்படி தொழிலாளிகள் சிதறி அலைந்த காட்டுயானைகளை ஷில்பி காபி தோட்டப்பகுதியில் ஒன்று சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சிக்கனஹள்ளி வழியாக துபாரே வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
பல மணி நேரம் நடந்த இந்த போராட்டம் வெற்றியடைந்தது. காபி தோட்ட தொழிலாளிகள் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி அடித்தனர். இதற்கு வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த காபி தோட்ட தொழிலாளிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளிகள், காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரை அமைக்கப்பட்ட சோலார் வேலிகள் செயல்படவில்லை. இரும்பு தடுப்பு வேலிகள் இருந்த அடையாளமே இல்லை.
இதுவரை வனத்துறை அதிகாரிகள் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தொழிலாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தால் விராஜ்பேட்டை காபி தோட்ட தொழிலாளிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.