< Back
தேசிய செய்திகள்
உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் - யுஜிசி தகவல்
தேசிய செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் - யுஜிசி தகவல்

தினத்தந்தி
|
21 Aug 2022 11:29 PM IST

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.

சென்னை:

வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கு உயர்படிப்புகளில் சேருவதற்கு 24 ஆயிரத்து 439 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையைவிட இது மிகவும் குறைவு ஆகும். அதாவது, தொற்று நோய்க்கு முந்தைய காலமான 2019-ம் ஆண்டில் 75 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் உயர் படிப்புக்காக இந்தியா வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கங்கள், இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை எளிதாக்குவதும், வெளிநாட்டு மாணவர்களை இந்திய உயர்கல்வி முறைகளில் ஈர்ப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் ஆகும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவிக்கிறது.

இந்த வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் இளங்கலை, முதுகலை திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை உருவாக்க அனுமதிக்கப்படும். இந்த சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகள் எதுவும் இருக்காது.

மாணவர் சேர்க்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிப்படையான செயல்முறையை பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு என்று உருவாக்கப்படும் பிரத்யேக இடங்களில், வெளிநாட்டு மாணவர்களை தவிர வேறு யாருக்கும் அந்த இடங்களை ஒதுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்