< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் 25 பேர் பலியான விபத்துக்கு மனித தவறுதான் காரணம்: போலீசார் விளக்கம்
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 25 பேர் பலியான விபத்துக்கு மனித தவறுதான் காரணம்: போலீசார் விளக்கம்

தினத்தந்தி
|
1 July 2023 8:14 PM IST

அதிக வேகம், டயர் வெடித்ததால் அல்ல, மனித தவறு தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார், போக்குவரத்து துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புல்தானாவில் நேற்று நள்ளிரவு பஸ் தீப்பிடித்து எரிந்த பயங்கர விபத்தில் 25 பயணிகள் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் பஸ் டிரைவர் தனிசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பஸ்சின் டயர் வெடித்தது விபத்துக்கு காரணம் என கூறுகிறார். ஆனால் போலீசார் விபத்து டிரைவரின் தவறு தான் காரணமாக இருக்கும் என சந்தேகப்படுகின்றனர்.

இதுதொடர்பாக நெடுஞ்சாலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பஸ் இரவு உணவுக்காக யவத்மாலில் உள்ள கரன்ஜா பகுதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சுமார் 2½ மணி நேரம் கழித்து 150 கி.மீ. தொலைவில் உள்ள புல்தானா பகுதியில் விபத்து நடந்து இருக்கிறது. எனவே பஸ் 60-70 கி.மீ. வேகத்தில் தான் வந்து இருப்பது தெரிகிறது. பஸ் அதிவேகமாக வரவில்லை. ஒருவேளை டிரைவர் தூங்கி இருந்தால் பஸ் வலது புறமாக சென்று தடுப்பு சுவரில் மோதி பின்னர் கவிழந்து இருக்கலாம். அதே நேரத்தில் டயர் வெடித்ததாக டிரைவர் கூறுகிறார். மனித தவறால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. " என்றார்.

டயர் வெடிக்கவில்லை

இதேபோல பஸ்சின் டயர் வெடித்து விபத்து ஏற்படவில்லை என அமராவதி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், " விபத்து நடந்த இடத்தில் ரப்பர் துண்டு அல்லத டயர் தடம் எதுவுமில்லை. டயர் வெடித்தற்கான எந்த தடயமும் விபத்த நடந்த இடத்தில் இல்லை. டயர் தடம் கூட இல்லை. விபத்தில் சக்கர அச்சில் வளைவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் டயரில் இல்லை. " என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்