< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவை

தினத்தந்தி
|
8 Sept 2023 3:24 AM IST

மாநிலங்களவையில், தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

பொதுவாக, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதா, அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநிலங் களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பிறகு ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து, அது சட்டமாக மாறும்.

மக்களவையில் எந்த மசோதாவாவது நிறைவேறாமல் நிலுவையில் இருந்தால், அந்த மக்களவை பதவிக்காலம் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மசோதாவும் காலாவதி ஆகிவிடும்.

ஆனால், மாநிலங்களவைக்கு பதவிக்காலமே கிடையாது. அது தொடர்ந்து இருக்கும். எனவே, அங்கு ஏதேனும் ஒரு மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தால், அது தொடர்ந்து உயிருடன் இருக்கும்.

25 மசோதாக்கள்

அந்தவகையில், 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மாநிலங்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

அவற்றில், 1992-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 79-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவும் அடங்கும். 2 குழந்தை களுக்கு மேல் பெற்றவர்கள், கிராம ஊராட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க அம்மசோதா வழி வகுக்கிறது. கட்சி களிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், அது நிறைவேற்றப்படவில்லை.

சட்ட மேலவை

2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதாவும் குறிப்பிடத்தக்க மற்றொரு மசோதா ஆகும். முந்தைய ஆட்சியில், சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய அம்மசோதா வகை செய்கிறது.

நிலுவையில் உள்ள சில முக்கியமான மசோதாக்களும், அவை கொண்டுவரப்பட்ட ஆண்டு விவரங்களும் வருமாறு:-

டெல்லி வாடகை திருத்த மசோதா-1997, நகராட்சிகள் எல்லை நீட்டிப்பு மசோதா-2001, விதை மசோதா-2004, இந்திய மருந்துகள் மற்றும் ஓமியோபதி மருந்தக மசோதா-2005, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா-2008, சுரங்கங்கள் திருத்த மசோதா-2011, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணி ஒழுங்குமுறை திருத்த மசோதா-2011,

தேர்தல் கமிஷனர்கள் நியமனம்

கட்டுமான தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா-2013, வேலைவாய்ப்பு அலுவலக காலியிட அறிவிப்பாணை திருத்த மசோதா-2013, ராஜஸ்தான் சட்ட மேலவை மசோதா-2013, பதிவு திருத்த மசோதா-2013,

அசாம் சட்ட மேலவை மசோதா-2013, வக்பு சொத்துகளை ஆக்கிரமித்தோரை வெளியேற்றும் மசோதா-2014, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் திருமண பதிவு மசோதா-2019, நதிநீர் பிரச்சினை திருத்த மசோதா-2019.

கடந்த மாதம் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் நியமன குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை விடுவிப்பதற்கான மசோதாவும் நிலுவையில் உள்ளது.

மேலும் செய்திகள்