அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் 23-ந்தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது 23-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
புதுடெல்லி,
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டு கடந்த அக்டோபர் 31-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்துள்ளது.
எனவே, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீடு மனு நவம்பர் 18-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.
பிரசாந்த் பூஷண்
இதன்படி, இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணை, உத்தரவு குறித்து, இடையீட்டு மனுதாரரான ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷண், கோபால் சங்கர நாராயணன் எடுத்துரைத்தனர்.
தள்ளிவைப்பு
மனுதாரர் ஒய்.பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், ''மனுதாரர் தரப்பில் இந்த விவகாரம் அவசரமாக முறையீடு செய்யப்பட்டது. அதையேற்றுதான் இந்த விசாரணை நடைபெறுகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் அல்லது சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என வாதிட்டார்.
வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ''விசாரணை கோர்ட்டில் உள்ள வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை பாதுகாத்து தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது'' என தெரிவித்தனர்.