மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்கிறது - மத்திய மந்திரி தகவல்
|நாட்டின் 236 மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்வதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
அனைத்து மாவட்டங்களும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையில் இருந்து விடுபட்டதாக அறிவிக்க வேண்டும் என்றும், சுகாதாரமற்ற கழிப்பறைகளை கையால் துப்புரவு செய்பவர்களின் தரவுகளை 'ஸ்வச்தா அபியான்' மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இருப்பினும், இதுவரை நம்பகமான தரவு எதுவும் பயன்பாட்டில் பதிவேற்றப்படவில்லை.
நாட்டில் உள்ள 236 மாவட்டங்கள் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையில் இருந்து தாங்கள் விடுபட்டதாக இப்போது வரை அறிவிக்கவில்லை.
ஆந்திரா, காஷ்மீர், மத்தியப்பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், ஒடிசா, தெலுங்கானா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்கிறது.
அதே சமயம் மாவட்டங்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலையில் இருந்து விடுப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.