கர்நாடகாவில் வாக்குச்சாவடியில் குழந்தை பெற்ற பெண்..!
|கர்நாடகாவின் பல்லாரியில் 23 வயது பெண் ஒருவருக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பல்லாரியில் 23 வயது பெண் ஒருவருக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய வாக்கைச் செலுத்துவதற்காக பல்லாரியின் குர்லகிண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு அந்தப் பெண் வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வாக்குச்சாவடியில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்த பெண் அதிகாரிகள் மற்றும் பெண் வாக்காளர்கள் அந்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவினர்.
முன்னதாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாகுப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ம் (சனிக்கிழமை) தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் முதன்முறையாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வீட்டில் வாக்களிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட 80,000 மூத்த குடிமக்கள், 19,279 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 15,328 அத்தியாவசிய சேவை பணியாளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க பதிவு செய்தனர். அவர்களில் மொத்தம் 94,931 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில் இருந்தே வாக்களிக்கும் வசதி பல்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.