< Back
தேசிய செய்திகள்
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மோடி, கெஜ்ரிவால் இடையேயான போராக இருக்கும்:  சிசோடியா பேச்சு
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மோடி, கெஜ்ரிவால் இடையேயான போராக இருக்கும்: சிசோடியா பேச்சு

தினத்தந்தி
|
20 Aug 2022 5:55 PM IST

2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் மோடி மற்றும் கெஜ்ரிவால் இடையேயான போராக இருக்கும் என டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பேசியுள்ளார்.



புதுடெல்லி,



டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அவரது ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக உள்ள மணீஷ் சிசோடியா கலால் துறைக்கும் பொறுப்பு வகித்து வருகிறார்.

டெல்லியில், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என புகார் எழுந்தது. மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டது என்றும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது என்றும் சர்ச்சை எழுந்தது.

இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். அதனையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ந்து மணிஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

எனினும், முழுவதும் வெளிப்படை தன்மையுடனேயே டெல்லி கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்றும் இன்று சிசோடியா கூறியுள்ளார். அவர் கூறும்போது, ஆம் ஆத்மியின் தலைவரை அச்சுறுத்தவே அனைத்து வழிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

கெஜ்ரிவாலின் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகள் உலகம் முழுவதும் பேசப்பட்டு உள்ளன. அதனால், அவரை தடுத்து நிறுத்த அவர்கள் முயல்கின்றனர் என சிசோடியா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் மோடி மற்றும் கெஜ்ரிவால் இடையேயான போராக இருக்கும் என டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பேசியுள்ளார். கெஜ்ரிவாலுக்கும், மோடிக்கும் இடையேயான வித்தியாசம், கெஜ்ரிவால் ஏழை மக்களை பற்றி சிந்திக்கிறார். ஆனால், மோடி தனது குறிப்பிட்ட நண்பர்களை பற்றி சிந்திக்கிறார் என சிசோடியா கூறியுள்ளார்.

சி.பி.ஐ. சோதனைக்கு பின் சிசோடியா கூறும்போது, சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் என்னுடைய குடும்பத்தினருக்கு எந்த அசவுகரியமும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் நல்ல அதிகாரிகள். ஆனால், சோதனை நடத்தும்படி அவர்களது மேலிடத்து உத்தரவு வந்துள்ளது என செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் கூறும்போது, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பின்னர், மக்களின் அன்பை பெற்ற கெஜ்ரிவால் மீது அவர்களுக்கு பயம் வந்து விட்டது. முதலில் அவர்கள் சுகாதார துறையை நிர்வகித்த சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர். அடுத்த ஒரு சில தினங்களில் நானும் கைது செய்யப்படுவேன் என்று சிசோடியா இன்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்