இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு - தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு
|இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் தபால் தலையை பெற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
கடந்த 1800-களில் இந்தியாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்கு தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் பலர் அங்கே குடிபெயர்ந்தனர். அவ்வாறு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த தருணத்தை சிறப்பிக்கும் வகையில் நினைவு தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அந்த அடிப்படையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தபால் தலையை, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.