போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம்: நிதின் கட்காரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
|1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது இருக்கும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.
புதுடெல்லி,
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.
இது தொடர்பாக நிதின் கட்காரி மேலும் கூறியதாவது:-
பர்வத் மாலா பரியோஜனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 200 ரோப்வே சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அதிக செலவு கொண்டது என்பதால், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக மலைப் பாங்கான இடங்களில் சுற்றுலாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து எளிதாக அமைவதுடன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஒட்டுமொத்தமாக 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப்வே சாலைகள் அமைக்கப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ரோப்வே சாலையாக இது அமையும்" இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.