200 ஆண்டுகளில் 200 மீட்டர்... நடந்து செல்லும் மாமரம்; குஜராத்தில் அதிசயம்
|குஜராத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஆண்டுதோறும் தொடர்ந்து நடந்து செல்லும் அதிசயம் நிகழ்கிறது.
வல்சாத்,
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் உமர்காம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சஞ்சான் என்ற கிராமம் உள்ளது. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆட்சி பகுதிக்கு அருகே அமைந்த இந்த கிராமத்தில் வாலி அகமது அச்சு என்பவரின் பண்ணை உள்ளது.
அதில், மிக பழமை வாய்ந்த மாமரம் ஒன்று உள்ளது. 1,300 ஆண்டுகளுக்கு முன்பு பார்சி இன மக்கள் இந்த பகுதியில் வந்து குடியேறினர்.
அவர்களால் இந்த மாமரம் நடப்பட்டு இருக்கும் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த மரத்தில் புதிய தண்டு வளர்ந்ததும், அதில் இருந்து தரைக்கு இணையாக கிளைகள் வளர தொடங்கும். புதிய வேர்களும் இதே முறையில் வளர்கின்றன என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
இதன்படி 2 நூற்றாண்டுகளில் இந்த மரம் 200 மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்றுள்ளது. இந்த மாமரம், குஜராத்தின் 50 பாரம்பரிய மரங்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இதனை காண நாடு முழுவதிலும் இருந்து மக்கள் பயணம் செய்து வந்து பார்த்து செல்கின்றனர்.
தொடர்ந்து இந்த பாரம்பரியம் வாய்ந்த மாமரம் கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த மரம் தங்களது மனங்களில் சிறப்பான இடம் பிடித்து உள்ளது என்றும் தனித்துவ பண்புகளை அது கொண்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
இதனை புனித மரம் என நினைத்து, அவர்கள் அதனை பாதுகாத்து வருகின்றனர். உள்ளூர்வாசிகள், பழங்குடியினர் இந்த மரத்திற்கு சடங்குகளும், பூஜைகளும் செய்து வருகின்றனர்.