இலவசமாக ஹெலிகாப்டரில் பறந்த 200 விவசாயிகள்
|இலவசமாக 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் பறந்தனர்.
சிக்கமகளூரு: கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர்.
2-வது நாளான இன்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த 2 நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்பட்டது. சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர். அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார். இதைதொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.