சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை; போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கலபுரகி:
கலபுரகி மாவட்டம் சின்சோலி தாலுகாவை சேர்ந்தவர் ரவி(வயது 40). தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் ரவி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தனது விளைநிலத்திற்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளாள். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவள் கற்பழிக்கப்பட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சின்சோலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எமனப்பா தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக ரவிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.