இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
|இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கொரோனா சிகிச்சை
சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்தது.
இதேப்போல், கர்நாடக முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்தநிலையில் இளம்பெண்ணின் தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் கொரோனா காரணமாக நோயாளிகளை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரியில் அனுமதி வழங்கவில்லை.
உணவு பொருட்கள்
மேலும், உறவினர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சோதனை செய்த பின்னர் நர்சுகள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்தனர். இந்தநிலையில் இளம்பெண் தனது தாயாரை பார்க்க சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது நர்சுகள் கொேரானா நோயாளிகளை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என கூறினர். இதையடுத்து இரவு வரை ஆஸ்பத்திரியிலேயே தாயை பார்க்க அவர் காத்திருந்தார். பின்னர் தாயாருக்கு உணவு வாங்க அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார்.
அப்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியில் நின்ற கார் டிரைவரிடம் இளம்பெண் உணவு வாங்குவதற்கு ஓட்டல் எங்கு உள்ளது என கேட்டார். அதற்கு இங்கு ஓட்டல்கள் ஏதும் கிடையாது. 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் ஓட்டல் உள்ளது என கூறினார். மேலும், நான் ஓட்டலுக்கு உணவு வாங்க தான் செல்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இதனை நம்பிய இளம்பெண் அவருடன் காரில் ஏறினார். அப்போது காரில் மேலும் 3 பேர் இருந்தனர். கார் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்றது. அப்போது காரில் வைத்து இளம்பெண்ணை அவர்கள் 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் இளம்பெண்ணை அரசு ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு சென்றனர்.
மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து இளம்பெண் சிவமொக்கா மகளிர் போலீஸ் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்த மனோஜ், பிரஜ்வல், வினய், சந்தீப் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார். அதில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மனோஜ், பிரஜ்வல், வினய், சந்தீப் ஆகிய 4 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
சிறை தண்டனை
மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் தலா 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ, 4 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.