காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
|காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள் 40 டி.எம்.சி .தண்ணீரை திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான விவாதத்தின் முடிவில் தமிழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. வீதம் மொத்தம் 20 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிடலாம் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.
கூட்டத்தில் கர்நாடக அரசு பிரதிநிதிகள் கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள தண்ணீர், மாநில தேவைக்காக மட்டுமே உள்ளதாகவும், எனவே தமிழகத்துக்கு நீர் திறந்து விட முடியாது என்றும் கூறினர். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தண்ணீர் திறந்து விட பரிந்துரைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.