ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயில்.. 3 நாட்களில் 20 பேர் பலி
|ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புவனேஸ்வர்,
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை தொடங்கினாலும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் இன்னும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக்காற்று வீசுகிறது. இதன் காரணமாக நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளில் தஞ்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெயில் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கிடையே, மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் 20 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பலாங்கிர், சம்பல்பூர், ஜார்சுகுடா, கியோஞ்சர், சோனேபூர், சுந்தர்கர் மற்றும் பாலசோர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெயிலால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்றும் இறப்புகளும் பதிவாகி வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.