இமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு: 20 பேர் மாயம் - பேரிடர் மீட்புப்படையினர் விரைவு
|இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் ராம்பூரில் இன்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மேலும் துணை ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் சஞ்சீவ் காந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேக வெடிப்பினால் அப்பகுதியில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சிம்லாவில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியிலும் மேக வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்திலும் 10 பேர் மாயமாகியுள்ளனர். அதில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான உத்தரகாண்டிலும் பருவமழை சீற்றம் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. அங்குள்ள தெக்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள ஜகன்யாலியில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இறந்தவர்கள் பானு பிரசாத் (50) மற்றும் அனிதா தேவி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.