கனமழையால் ஆற்று பாலத்தில் 20 அடி நீளத்திற்கு விரிசல்; வாகன போக்குவரத்துக்கு தடை
|கனமழையால் ஆற்று பாலத்தில் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துமகூரு:
துமகூரு மாவட்டத்தில் கொரட்டகெரே தாலுகா உள்பட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இரவு முழுவதும் பெய்த கனமழைக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை காரணமாக கோரவனஹள்ளி, டிட்டா பகுதிக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள 25 ஆண்டுகள் பழமையான ஆற்றுப்பாலத்தின் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி நீளத்திற்கு இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பாலத்தில் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பாலத்தை பயன்படுத்தும் மக்கள் தற்போது மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பொதுப்பணி துறை என்ஜினீயர் மல்லிகார்ஜூனா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர் அந்த பகுதியில் புதிதாக பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.