கொச்சி விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - ஒருவர் கைது
|ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து உள்ளனர்
திருவனந்தபுரம்,
ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கொச்சிக்கு போதை பொருள் கடத்தி வருவதாக கேரள வருவாய்த்துறை நுண்ணறிவு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆப்பிரிக்க நாடான கேப்டவுன் நகரில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக விமானத்தில் பயணம் செய்து வந்த முகமது அலி (வயது 46 ) என்ற நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபரை தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் தனது கைப்பையில் ரகசிய அறை அமைத்து அதற்குள் நான்கு பாக்கெட்டுகளில் ஹெராயின் கடத்தி வந்தது தெரியவந்தது .
பின்னர் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இவர் வெளிநாட்டு போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய காரணியாக இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும்,இந்த நபர் கொண்டு வந்த ஹெராயின் எடை 2.887 கிராம் ஆகும். இதன் சந்தை மதிப்பு 20.18 கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. இது அண்மையில் நடைபெற்ற மிகப் பெரிய அளவு உள்ள ஒரு போதை மருந்து கடத்தல் சம்பவமாக கருதப்படுகிறது .
ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை நெடும்பாசேரி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கைதான இவர் ஆலுவா முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவரிடம் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.