திருட்டு வழக்கில் இருவருக்கு தலா 2½ ஆண்டு சிறை உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு
|திருட்டு வழக்கில் இருவருக்கு தலா 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மங்களூரு-
உடுப்பி டவுன் ஷிரூரில் நாராயணி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி மர்மநபர்கள் புகுந்து ரூ.8.66 லட்சம் மதிப்பிலான 339 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவிலில் புகுந்து திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நரசிம்மராஜு, முகமது ஷபீர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை உடுப்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி டவுன் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து உடுப்பி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டு நீதிபதி தீபா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது 2 பேர் மீதான குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 2½ ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.5,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.