அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
|அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் புறநகர் சதர்பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மன்சலாபுரா கிராமத்தில் ஒரு அரிசி ஆலை உள்ளது. அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரா (வயது 40) மற்றும் நதீஸ் (27) ஆகிய 2 பேரும் தொழிலாளா்களாக வேலை பார்த்து வந்தனர். அந்த ஆலையில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வியாபாரத்தி்ற்காக அரிசி மூட்டைகளை உபேந்திரா, நதீஸ் எடுத்தார்கள். அப்போது திடீரென்று அரிசி மூட்டைகள் சரிந்து 2 பேர் மீதும் விழுந்து அமுக்கியது. அந்த சந்தர்ப்பத்தில் ஆலையில் மற்ற யாரும் இல்லாத காரணத்தால், அரிசி மூட்டைகளுக்குள் சிக்கி உபேந்திரா மற்றும் நதீஸ் மூச்சு திணறி பரிதாபமாக இறந்து விட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சதர்பஜார் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது உயரமான இடத்தில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததால், அதனை எடுக்க முயன்றபோது மூட்டைகள் சரிந்து 2 பேரும் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து சதர்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.