காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பண்டிட்டை சுட்டுக்கொன்றவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சாவு
|காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக்கொன்றவர் உள்பட 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். இதில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் அவந்திப்போரா மாவட்டம் பட்கம்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நள்ளிரவில் போலீசாரும், ராணுவத்தினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் சுதாரித்துக்கொண்டு எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பண்டிட்
இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்களில் ஒருவர் ெபயர் அக்யுப் முஸ்டாக் பட் என்றும், புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்தவரை சுட்டுக்கொன்றவர் என்றும் தெரிய வந்தது. சஞ்சய்குமார் என்ற அந்த காஷ்மீர் பண்டிட், புல்வாமா மாவட்டம் அச்சன் கிராமத்தை சேர்ந்தவர். ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் காவலாளியாக வேலை செய்து வந்தார். உள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்ற வழியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராணுவ வீரர் பலி
அந்த கொலையை செய்த அக்யுப் முஸ்டாக் பட், இந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார். ஆரம்பத்தில், ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த அவர், பிறகு, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' என்ற இயக்கத்தில் சேர்ந்தார்.
துப்பாக்கி சண்டையில், ராணுவ தரப்பில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.