அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிடுந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
|காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜூன் 30 ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரு பயங்கரவாதிகள் காஷ்மீரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரின் பெமினா பகுதியில் நேற்று இரவு நடந்த இந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் போது, ஒரு போலீசாருக்கு காயம் ஏற்படுள்ளது.
புனித யாத்திரையின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய கவலையாக உள்ளது. கடந்த மாதம், ஜம்முவில் கத்ரா அருகே வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் சென்ற பேருந்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.
இந்த 100 பேரில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்ளூரை சேர்ந்தவர்கள். இது பயங்கரவாதத்தில் சேரும் காஷ்மீரி இளைஞர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் அதிகரிப்பை காட்டுகிறது.