சகோதரன் திட்டிய சோகத்தில் விஷம் குடித்த 2 டீன்-ஏஜ் சகோதரிகள்...
|உத்தர பிரதேசத்தில் சகோதரன் திட்டிய சோகத்தில் விஷம் குடித்து 2 டீன்-ஏஜ் சகோதரிகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
பரேலி,
உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் இருவரை அவர்களது சகோதரர் கோபத்தில் திட்டியுள்ளார்.
இதனால், சோகத்தில் இருந்த சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பக்கத்து கிராமத்துக்கு சென்று இருவரும் விஷம் வாங்கி வந்துள்ளனர். அவர்கள் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷம் குடிக்கும் முடிவை தெரிவித்து உள்ளனர்.
இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின்னர், சகோதரிகள் இருவரும் விஷம் குடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து குடும்பத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், சகோதரிகளில் ஒருவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். மற்றொரு சகோதரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். சிகிச்சை பெற்ற சகோதரியிடம் அந்த பகுதி தாசில்தார் மருத்துவமனையில் வைத்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.
அதில், சகோதரிகள் இருவரும் விஷம் குடித்தது பற்றி அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சகோதரன் திட்டியதற்காக விஷம் குடித்து சகோதரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்போரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.