உப்பள்ளியில் திருட்டு வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது
|உப்பள்ளியில் திருட்டு வழக்கில் புனேயை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்பள்ளி:
தார்வார் மாவட்டம் உப்பள்ளி நகர் உபநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேப்படும்படியாக நின்ற ஒரு பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புனேயை சேர்ந்த ஜோஷ்னா (வயது 38), நவஜீவன் (45) என்பதும், இருவரும் உப்பள்ளி நகரில் ஆளில்லாத வீட்டில் புகுந்து திருடி வந்ததும் தெரியவந்தது.
உப்பள்ளி மட்டுமின்றி தார்வாரிலும் அவர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3.38 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதுகுறித்து உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.