மீன் கடையில் திருடிய ஊழியர் உள்பட 2 பேர் கைது
|மைசூருவில் மீன் கடையில் ரூ.11½ லட்சம் திருடிய வழக்கில் ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு:-
மீன் கடையில் திருட்டு
மைசூரு (மாவட்டம்) டவுன் புலிகேசி ரோடு பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் அம்ஜத் பாஷா என்பவர் மீன் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி இரவு மீன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ரூ.11½ லட்சம் ரொக்கம், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் மண்டிமொஹல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மீன் கடையில் திருடியதாக அதே கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் மண்டிெமாஹல்லா பகுதியை சேர்ந்த பாரூக்கான் (வயது 33) என்பவரைபோலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அம்ஜத் பாஷா கடையில் பாரூக்கான் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பள பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு நின்றுள்ளார்.
ஆடம்பர செலவு
இதனால் அம்ஜத் பாஷா கடையில் தற்போது வேலை பார்க்கும் நபருடன் சேர்ந்து பாரூக்கான் மீன் கடையில் புகுந்து ரூ.11½ லட்சம் ரொக்கத்தை திருடி உள்ளார். இதையடுத்து அம்ஜத் பாஷா கடையில் வேலை பார்த்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பாரூக்கானிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மண்டிமொஹல்லா போலீசார் கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.