பெண் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை: குழந்தைகள் சண்டை கொலையில் முடிந்தது,!
|போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகிறார்கள்.
மீரட்,
உத்தரபிரதேசத்தின் மீரட் அருகே உள்ளது சேலம்பூர் கிராமம். இங்கு மெக்ராஜ் மற்றும் இக்பால் ஆகியோரின் குடும்பங்கள் வசித்து வருகிறது. நேற்று முன்தினம் அவர்களது குழந்தைகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அறிந்த பெரியவர்களும் தங்களின் குழந்தைகளுக்கு வக்காலத்து வாங்கி, தகராறில் ஈடுபட்டனர். அப்போது சூடான வசை வார்த்தைகளை கொட்டியதால் இருதரப்புக்கும் ஆத்திரம் தலைக்கேறியது.
பின்னர், மெக்ராஜ் (வயது 35) பள்ளிவாசலுக்கு புறப்பட்டு சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மெக்ராஜ் இறந்தார்.
இதையடுத்து மெக்ராஜின் உறவினர்கள், இக்பாலின் வீட்டிற்கு சென்று பதிலடியாக அவரது மனைவி அப்ராஸை (45) துப்பாக்கியால் சுட்டனர். அவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பினரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகிறார்கள்.