< Back
தேசிய செய்திகள்
ஓட்டல் அறையில் ரகசிய கேமரா: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதல் ஜோடியிடம் பணம் பறிக்க முயற்சி பெண் உள்பட 2 பேர் கைது
தேசிய செய்திகள்

ஓட்டல் அறையில் ரகசிய கேமரா: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதல் ஜோடியிடம் பணம் பறிக்க முயற்சி பெண் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Sept 2023 2:52 AM IST

இதுகுறித்து அறிந்த நயனா மற்றும் கிரண், காதல் ஜோடி தங்கும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி அவர்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்தனர்.

கெங்கேரி,

பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண். இவர்கள் 2 பேரும் அந்த ஓட்டலை நிர்வகித்து வருகின்றனர். நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் அடிக்கடி நயனாவின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளார். மேலும் அவ்வப்போது அவர் தனது காதலனையும் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் அவர்கள் 2 பேரும் தங்கியதுடன், உல்லாசமாக இருந்துள்ளனர்.இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த நயனா மற்றும் கிரண், காதல் ஜோடி தங்கும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி அவர்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்தனர்.

மேலும் அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ் அப்பிற்கு கிரண் அனுப்பி வைத்தார். மேலும் அந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருடன் சேர்ந்து சந்திரா லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் ஓட்டலில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் அறையில் ரகசிய கேமரா இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் நயனா மற்றும் கிரண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்