திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்
|திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அர்ஜுன் சிங் மற்றும் திப்யேந்து அதிகாரி ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் நாளை(சனிக்கிழமை) தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இன்றைய தினம் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
இதன்படி மேற்கு வங்க மாநிலம் பராக்பூர் தொகுதி எம்.பி. அர்ஜுன் சிங் மற்றும் தாம்லுக் தொகுதி எம்.பி. திப்யேந்து அதிகாரி ஆகியோர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். இதில் அர்ஜுன் சிங் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
பின்னர் பராக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2022-ம் ஆண்டு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இருப்பினும் நாடாளுமன்ற பதிவேட்டின்படி அவர் பா.ஜ.க. எம்.பி.யாகவே நீடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
அதேபோல், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரியின் சகோதரரும், தாம்லுக் தொகுதி எம்.பி.யுமான திப்யேந்து அதிகாரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.