மக்கள் தொகை கணக்கெடுப்பதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை
|வீட்டிற்குள் சென்றதும் அவர்கள் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் அமராவதி அருகே ரதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் போல வேடமிட்டு இருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டில் வசிப்பவர்கள் பற்றிய விபரங்களை கேட்ட அவர்கள், ஆதார் அட்டையை காண்பிக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளனர்.
உண்மையான மக்கள் தொகை அதிகாரிகள் என நம்பிய அப்பெண், ஆதார் அட்டையை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பின் தங்களது சுயரூபத்தை காட்டிய அவர்கள், கத்தியை காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.