< Back
தேசிய செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
தேசிய செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
1 Feb 2024 4:50 PM IST

மத்திய மந்திரி சபைக்கு ரூ.1,248.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.2,02,868.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படையின் கீழ் வரும் காவல்துறைக்கு சுமார் ரூ.1,32,345.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.37,277.74 கோடி, லடாக்கிற்கு ரூ.5,958 கோடி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ரு.5,866.37 கோடி, சண்டிகருக்கு ரூ.5,862.62 கோடி, புதுச்சேரிக்கு ரூ.3,269 கோடி, தியு-தாமன் மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலிக்கு ரூ.2,648.97 கோடி, லட்சத்தீவுகளுக்கு ரூ.1,490.10 கோடி மற்றும் டெல்லிக்கு ரூ.1,168.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி சபைக்கு ரூ.1,248.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மந்திரிகள் குழு, மந்திரி சபை செயலகம், பிரதமர் அலுவலகம், அரசாங்கத்தின் வரவேற்பு மற்றும் பொழுதுபோக்குக்கான செலவுகள் ஆகியவை அடங்கும்.

அதே போல், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ரூ.32,809.65 கோடி, எல்லை பாதுகாப்பு படைக்கு ரூ.25,027.52 கோடி, மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு ரூ.13,655.84 கோடி, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு ரூ.8,253.53 கோடி, எஸ்.எஸ்.பி. படைப்பிரிவுக்கு ரூ.8,485.77 கோடி, அசாம் ரைபில்ஸ் படைப்பிரிவுக்கு 7,368.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய உளவுத்துறைக்கு ரூ.3,195.09 கோடி, டெல்லி காவல்துறைக்கு ரூ.11,177.50 கோடி, பிரதமருக்கான பாதுகாப்பு படைக்கு(எஸ்.பி.ஜி.) ரூ.506.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்