கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் உயிரிழப்பு
|மொகாலியில் கட்டுமானப் பணியின்போது ஷோரூமின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மொகாலி,
பஞ்சாப் மாநிலம் மொகாலி சிட்டி சென்டரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஷோரூம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
மொகாலி விமான நிலைய சாலையில் மொகாலி சிட்டி சென்டரில் கட்டப்பட்டு வரும் ஷோரூம் ஒன்றின் சுவர் நேற்று இரவு இடிந்து விழுந்தது. எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் இருவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்த ரூப்நகர் ரேஞ்ச் டிஐஜி மீட்பு பணிகளை பார்வையிட்டார். உயிரிழந்தவர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் ரூப்நகர் ரேஞ்ச் போலீசார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.