< Back
தேசிய செய்திகள்
வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக தகராறு: கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை - 144 தடை உத்தரவு அமல்
தேசிய செய்திகள்

வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக தகராறு: கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை - 144 தடை உத்தரவு அமல்

தினத்தந்தி
|
12 Aug 2022 2:37 AM IST

கொப்பல் அருகே, வால்மீகி சிலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொப்பல்:

சிலை அமைப்பதில் தகராறு

கொப்பல் மாவட்டம் கனககிரி தாலுகாவில் உள்ளது ஹீலிஹைதர் கிராமம். இந்த கிராமத்தில் வால்மீகி சிலை அமைக்க ஒரு சமூகத்தினர் முடிவு செய்து இருந்தனர். ஆனால் இதற்கு இன்னொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக வால்மீகி சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக இருசமூகத்தினர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு சமூகத்தினர் வால்மீகி சிலை அமைக்க இன்னொரு சமூகத்தினர் தேர்வு செய்து வைத்திருந்த இடத்தில் வைத்து முகரம் பண்டிகை கொண்டாடியதாக தெரிகிறது. இதனால் இருசமூகத்தினர் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருசமூகத்தினரும் கத்தி, வாளால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

2 பேர் கொலை

இந்த மோதலில் ஹீலிஹைதர் கிராமத்தை சேர்ந்த யங்கப்பா தல்வார் (வயது 60), பாஷாவலி சாப் மாலிகடி (22) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். மேலும் தர்மண்ணா ஹரிஜன் என்பவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை சிலர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இருசமூகத்தினரும் வாள்களுடன் கிராமத்தில் வலம் வந்தனர். மேலும் வீடுகளுக்குள் புகுந்து தாக்க முயன்றனர். இதுபற்றி அறிந்ததும் கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருணகிரி, கங்காவதி போலீசார் ஹீலிஹைதர் கிராமத்திற்கு சென்று இருசமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஹீலிஹைதர் மற்றும் அதனை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள கிராமங்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கனககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்