மத்தியப் பிரதேசம்: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 சிறுமிகள் உட்பட 5 பேர் பலி
|மத்தியப் பிரதேசத்தில் 2 லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புர்ஹான்பூர்,
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் இன்று கரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு சிறுமிகள், பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
தெத்தளை-ஷேகுபுரா சாலையில் இன்று மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள், 32 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் 35 வயதுடைய ஒரு ஆண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தையடுத்து கரும்பு ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.