< Back
தேசிய செய்திகள்
ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை கலந்த மாணவிகள்
தேசிய செய்திகள்

ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை கலந்த மாணவிகள்

தினத்தந்தி
|
8 Oct 2023 3:35 AM IST

மங்களூரு அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை மாணவிகள் கலந்தனர். இதனால் 2 ஆசிரியைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மங்களூரு:

மங்களூரு அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் வழங்கிய ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை மாணவிகள் கலந்தனர். இதனால் 2 ஆசிரியைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தேர்வில் குறைந்த மதிப்பெண்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த உல்லாலில் அரசு தொடக்கபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு தேர்வு நடந்தது. அப்போது கணித தேர்வில் 2 மாணவிகளுக்கு குறைந்த மதிப்பெண் கிடைத்தது. இதனால் அந்த மாணவிகள் கணித ஆசிரியை மீது கோபத்தில் இருந்தனர். சரியாக தேர்வு எழுதியும் ஆசிரியை குறைந்த மதிப்பெண் போட்டிருப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். மேலும் குறைந்த மதிப்பெண் வழங்கிய ஆசிரியையை மாணவிகள் பழிவாங்க நினைத்தனர்.

அதன்படி மாணவிகள் ஆசிரியை பயன்படுத்தும் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரையை போட்டனர். அந்த தண்ணீரை ஆசிரியை மற்றும் அவருடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஆசிரியையும் குடித்தனர். இந்த தண்ணீரை குடித்ததில் ஒரு ஆசிரியைக்கு முகம் வீங்க தொடங்கியது. மற்றொரு ஆசிரியைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

2 ஆசிரியைகள் பாதிப்பு

இதனால் பதற்றம் அடைந்த ஆசிரியைகள், ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தண்ணீரில் காலாவதியான மாத்திரை கலந்திருப்பதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் உடனே தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். உடனே தலைமை ஆசிரியர் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது 2 மாணவிகள் ஆசிரியையின் குடிநீர் பாட்டிலில் காலாவதியான மாத்திரைகளை போட்டது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால் இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்