மடாதிபதி மீது பாலியல் புகார்: 2 மாணவிகள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம்
|மடாதிபதி மீது பாலியல் புகார் அளித்த 2 மாணவிகள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
சித்ரதுர்கா:
மடாதிபதி மீது பாலியல் புகார் அளித்த 2 மாணவிகள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்த 2 மாணவிகளை, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று முன்தினம் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவிகள் நேற்று சித்ரதுர்கா முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தலித் அமைப்பினர் போராட்டம்
இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கி உள்ள மடாதிபதி முருகா சரணருவை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மடாதிபதியை உடனடியாக கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இது ஒருபுறம் இருக்க மடாதிபதி முருகா சரணருவை நேற்று கனகபுரா மும்முடி சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி தலைமையில் பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் மும்முடி சித்தேஸ்வரா மடத்தின் மடாதிபதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது, 'மடாதிபதி முருகா சரணரு மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும்' என்று கூறினார்.